மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்குச் சென்று நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

Published Date: April 24, 2023

CATEGORY: CONSTITUENCY

உதவி உபகரணங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாக செயல்படும் வகையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர வண்டிகள், காதொலிக்கருவிகள், பார்வையற்றோருக்கான கருப்புக்கண்ணாடி, ஒளிரும் மடக்குச் குச்சிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கான மாற்று வழியில் தொடர்பு கொள்ளும் சாதனங்கள் உள்பட 24 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, மதுரை மத்திய சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயனடையும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் மனு கொடுத்தவர்களுக்கு, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரிடையாக அவர்களது இல்லங்களுக்குச் சென்று நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

எல்லீஸ் நகர்

அதன்படி அவர் நேற்று மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே நேரில் சென்று பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். இதில் மதுரை மாநகராட்சி 55-வது வார்டு பகவான் செட்டி மடம் பகுதியில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும், வார்டு 56, 57 மோதிலால் மெயின் ரோடு பகுதிகளில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கும், வார்டு எண் 21, 22 கொன்னவாயன் சாலைப்பகுதியில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், வார்டு எண் 61 அன்சாரி நகர் பகுதியில் ஒரு மாற்றுத்திறனாளிக்கும், வார்டு எண் 59, 60 எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில் இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கும், வார்டு 75 வசந்த நகர் பகுதியில் ஒரு மாற்றுத்திறனாளிக்கும், வார்டு எண் 77 சுப்பிரமணியபுரம் பகுதியில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், வார்டு எண் 76 மேலவாசல் பகுதியில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். இந்த விழாவில் மேயர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Media: DAILYTHANTHI